'தளபதி' விஜய் நடிப்பில், வெளியாகியுள்ள லியோ திரைப்படம் எல்லா காலத்திலும் இரண்டாவது பெரிய தமிழ் என்ற பெருமையை அடைவதற்காக ரஜினிகாந்தின் ஜெயிலருக்கு எதிராக கடுமையான போட்டியில் ஈடுபட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் படம் வெளியான 12-வது நாளின் வசூல் நிலவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் லியோ. த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம்மேனன் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த படம் கடந்த அக்டோபர் 19-ந் தேதி வெளியானது. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது.
அந்த வகையில் தற்போது லியோ படம் வெளியானி 2 வாரங்கள் முடிந்துள்ள நிலையில், இந்தியா மற்றும் உலகளாவிய வசூலில் முக்கிய மைல்கற்களைக் கடந்துவிட்ட போதிலும் தினசரி வசூலில் சற்று பின்தங்கியுள்ளது. இதில் லியோ படம் வெளியாகி 12வது நாளில், இந்தியா முழுவதும் ரூ. 4.5 கோடி வசூலித்ததாக தொழில்துறை டிராக்கர் சாக்னில்க் தெரிவித்துள்ளது. இதன் மூலம் படத்தின் மொத்த இந்திய பாக்ஸ்ஆபீஸ் வசூல் ரூ.308 கோடியாக உயர்ந்துள்ளது.
அதேபோல் 12 வது நாளில் லியோ படத்தின் தமிழ் மொழி பதிப்பின் ஒட்டுமொத்த ஆக்கிரமிப்பு 21% ஆகவும், தெலுங்கு ஆக்கிரமிப்பு 28% ஆகவும், ஹிந்தி பதிப்பு 10% க்கும் குறைவாக பதிவாகியுள்ளது. லியோ வெளியான முதல் நாளான வியாழன் அன்று ரூ.64 கோடிக்கு வசூலித்தது. டெய்லர் ஸ்விஃப்ட்டின் தி ஈராஸ் டூர் கன்சர்ட் மற்றும் மார்ட்டின் ஸ்கோர்செஸியின் கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன் ஆகியவற்றை விட லியோ தனது முதல் வார இறுதியில் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் முதலிடம் பிடித்தது.
இதன் மூலம் லியோ தற்போது இந்த ஆண்டின் இரண்டாவது பெரிய தமிழ் வெற்றிப் படமாக மாறியுள்ள நிலையில், ரஜினிகாந்தின் ஜெயிலருக்குப் அடுத்த இடத்தை பிடித்துள்ளது. மேலும் விஜயின் திரை வாழ்க்கையில், இதுவரை இல்லாத வகையில் லியோ பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது. மேலும் இது ஜெயிலர் மற்றும் 2.0 படங்களைத் தொடர்ந்து உலகளவில் இதுவரை 537 கோடி ரூபாய் வசூலித்து எல்லா காலத்திலும் மூன்றாவது பெரிய தமிழ் வெற்றியாக பதிவு செய்துள்ளது. 604 கோடி என்ற ஜெயிலரின் உலக சாதனையை முறியடிக்க லியோ இப்போது கடும் போட்டியில் உள்ளது. ஆனால் தற்போது லியோவின் வீழ்ச்சியை பார்க்கும்போது ஜெயிலர் சாதனையை முறியடிப்பது கடினமான பணியாக இருக்கலாம். ஜெயிலரை விட லியோ தற்போது ரூ.67 கோடிக்கு பின்தங்கியுள்ளது.
லியோ லோகேஷ் கனகராஜூன் சினிமா பிரபஞ்சத்தின் (எல்.சி.யூ)ஒரு பகுதியாகும். இந்த தொடரில் கார்த்தியின் கைதி மற்றும் கமல்ஹாசனின் விக்ரம் படங்களும் அடங்கும். தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கவுள்ள லோகேஷின் புதிய படத்துடன் எல்.சி.யூ தொடர்வதாக கூறப்படுகிறது. இது உண்மையாக மாறினால், ரஜினிகாந்த், விஜய், கமல்ஹாசன் ஆகியோரை ஒரே படத்தில் இணைத்து தமிழ்த் திரையுலக வரலாற்றில் மிகப் பெரிய நடிகர் இணைப்பை லோகேஷ் உருவாக்க வாய்ப்புள்ளது.