தைவான் ஹாங்ஃபு நிறுவனம் (Hongfu) ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பணப்பாக்கத்தில் மிகப்பெரிய நான் லெதர் உற்பத்தி யூனிட் ஒன்றை அமைக்கவுள்ளது.
தமிழகத்தில் ரூ.7,108 கோடி முதலீடு செய்ய உள்ள 8 நிறுவனங்களுக்கு தொகுப்பு சலுகைகள் வழங்குவதற்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் செவ்வாய் கிழமை (அக். 31) நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் முதலீடு செய்ய பல நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன. அந்த வரிசையில், 8 நிறுவனங்கள் அமைப்பு முறையிலான தொகுப்பு சலுகைகளை பெறுவதற்கும், ஏற்கெனவே உள்ள நிறுவனங்கள் விரிவாக்க நடவடிக்கைக்கு சலுகைகளை பெறவும் இந்த அமைச்சரவையில் கருத்துருக்கள் ஆய்வு செய்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ரூ.7108 கோடி முதலீட்டில் 22,536 வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்துக்கு அமைச்சரவையில் தொகுப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.இந்த நிறுவனங்கள் மின்வாகன பாகங்கள், காலணி உற்பத்தி, விண்வெளி பாதுகாப்பு, கண்ணாடி பொருட்கள், ஆராய்ச்சி மேம்பாட்டுத்துறையில் முதலீடுகளை செய்ய உள்ளனர் என்றார்.
தைவான் ஹாங்ஃபு நிறுவனம் (Hongfu) ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பணப்பாக்கத்தில் மிகப்பெரிய நான் லெதர் உற்பத்தி யூனிட் ஒன்றை அமைக்கவுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயின்ட் கோபேன் (Saint Gobain) நிறுவனம் புதிய உற்பத்தி ஆலையை அமைக்கிறது.
பிரெஞ்சு கண்ணாடி தயாரிப்பாளர் அக்டோபர் 6 ஆம் தேதி தமிழ்நாட்டில் சோலார் கிளாஸ் உட்பட பல்வேறு வணிகங்களில் ரூ 3,400 கோடி முதலீடு செய்ய உறுதியளித்தார்.தென் கொரிய நிறுவனமான Seoyon E-Hwa Mobility, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மின்சார வாகன (EV) உதிரிபாக உற்பத்தி யூனிட் ஒன்றை அமைக்கும், இது மாநில அரசாங்கத்தால் மின்சார வாகன உற்பத்திக்கான மையமாக கணிக்கப்படுகிறது.
மாநிலத்தில் உள்ள மைலான் லேபரட்டரீஸ், சுந்தரம் ஃபாஸ்டெனர்ஸ் மற்றும் இன்டர்நேஷனல் ஏரோஸ்பேஸ் மேனுஃபேக்சரிங் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் முதலீடுகளுக்காக அமைப்பு முறையிலான தொகுப்பு சலுகைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் ஆகியவற்றின் கூட்டு முயற்சியான IAMPL, பெங்களூரு அருகே ஓசூரில் தனது உற்பத்தி வசதியை விரிவுபடுத்தவுள்ளது.
மேலும் தமிழ்நாடு மாநில துறைமுக மேம்பாட்டு கொள்கை - 2023 குறித்து அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டு, அது குறித்து விவாதித்து, கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.தமிழகம் தொழில் துறையில் முன்னணி மாநிலமாக உள்ளது. இந்த மாநிலத்தில் கடற்கரை மிகவும் நீளமானது. சுமார் 1,076 கி.மீ. நீளமான கடற்கரையை நாம் பெற்றுள்ளோம். இதில் 4 பெரிய துறைமுகங்கள், 17 சிறிய துறைமுகங்களும் உள்ளன. நம்முடைய தொழில் வளர்ச்சிக்கு சிறந்த துறைமுக கட்டமைப்பு அவசியம். இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மாநில துறைமுக மேம்பாட்டு கொள்கை - 2023 வடிவமைக்கப்பட்டுள்ளது, என்றார்.