முன்னாள் டி.ஜி.பி திலகவதி ஐ.ஐ.டி மெட்ராஸ் மாணவர் குறைதீர்ப்பாளராக நியமனம்; மாணவர்களின் குறைகளை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை
சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐ.ஐ.டி மெட்ராஸ்) ஆட்சிமன்றக் குழு, தமிழ்நாடு காவல்துறையின் முன்னாள் இயக்குநர் ஜெனரல் (டி.ஜி.பி) ஜி.திலகவதி ஐ.பி.எஸ்-ஐ ‘மாணவர் குறைதீர்ப்பாளராக’ நியமித்துள்ளது. மாணவர் குறைதீர்ப்பாளராக, G. திலகவதி IPS, மாணவர்களின் குறைகள், பாதுகாப்பு மற்றும் ஒழுக்காற்று விவகாரங்கள் தொடர்பான கவலைகளைக் கண்காணித்து நிவர்த்தி செய்வார். அவரது நியமனத்தின் மூலம், வளாகத்தில் உள்ளடங்கிய சூழலை வளர்ப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் அவர் பொறுப்பேற்பார், மேலும், மாணவர்களின் கல்வி மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கு ஆதரவான சூழல் இருப்பதை உறுதிசெய்வார்.
திலகவதி ஐ.பி.எஸ் மாணவர்களுடன் நெருக்கமாக பணியாற்றுவார் மற்றும் அவர்களுக்கு ஆதரவளிப்பார். இதன்மூலம் ஐ.ஐ.டி நிர்வாகம், மாணவர் குறைதீர்ப்புக் குழுவுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டு, குறைகள் குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்க்கப்படுவதை உறுதி செய்யும்.
"ஐ.ஐ.டி மெட்ராஸ் எப்போதும் எங்கள் மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து வருகிறது, மேலும் மாணவர் குறைதீர்ப்பாளராக திலகவதி நியமிக்கப்பட்டது, எங்கள் மாணவர்களின் ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்துவதற்கான எங்கள் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, அதே நேரத்தில் மாணவர்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் அவர்கள் அணுகுவதற்கு நம்பகமான அதிகார அமைப்பை வழங்குகிறது" என்று ஐ.ஐ.டி மெட்ராஸ் இயக்குனர் பேராசிரியர் வி. காமகோடி கூறினார். "மாணவர்களின் கவலைகள் கேட்கப்படுவதையும், உடனடியாகவும் நியாயமான முறையில் நிவர்த்தி செய்யப்படுவதையும் உறுதிசெய்ய அவர் நிறுவனத்துடன் நெருக்கமாக பணியாற்றுவார். மாணவர்களின் கல்வி மற்றும் தனிப்பட்ட முயற்சிகள் இரண்டிலும் சிறந்து விளங்கும் வகையில் பாதுகாப்பான மற்றும் வளர்ப்பு வளாக சூழலை உருவாக்குவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்,” என்று பேராசிரியர் வி. காமகோடி கூறினார்.