ஜாமீன் கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மேல்முறையீடு மனு மீதான விசாரணையை நவம்பர் 6ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுவரும் நிலையில், நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு 9வது முறையாக நீதிமன்ற காவல் வருகிற நவம்பர் மாதம் 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
இதற்கிடையில், அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே 2 முறை மனு தாக்கல் செய்தார். ஜூன் 16 மற்றும் செப்டம்பர் 20ம் தேதி அந்த மனுக்களை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தள்ளுபடி செய்தார். இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை கடந்த 19ஆம் தேதி விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் மருத்துவ காரணங்களை காட்டியும், சாட்சிகளை கலைக்கும் வாய்ப்பும் உள்ளதாக கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். இதனை எதிர்த்து தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்து இருந்தார்.
சுப்ரீம் கோர்ட் உத்தரவு
இந்த மேல்முறையீட்டு மனு இன்று (திங்கள்கிழமை) நீதிபதிகள் அனிருதா போஸ், பேலா. எம். திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சொலிசிட்டர் ஜெனரல் தரப்பில் மனுவை ஒத்திவைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனால் நீதிபதிகள் மனு மீதான விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைக்க முடிவு செய்தனர்.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இது ஜாமீன் விவகாரம். மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் கோருகிறோம். அதனை வருகிற திங்கள்கிழமை விசாரணைக்கு எடுக்க முடியுமா? என்று கோரிக்கை விடுத்தார். அப்போது நீதிபதி திரிவேதி "இது மிகவும் அவசரமான விஷயமாக இருந்தால், ஆலோசகர் ஆஜராக வேண்டும்" என்று கருத்து தெரிவித்தார்.
இறுதியில், மனு மீதான விசாரணையை வருகிற நவம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி போஸ் உத்தரவிட்டார். இதனால், அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனு மீதான விசாரணை நவம்பர் 6ஆம் தேதி அன்று நடைபெறும். அதுவரை செந்தில் பாலாஜி சிறையில் இருக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.