தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத் தீவு பகுதியில் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த சில மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதன் காரணமாக, தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் இன்று (டிச.9) கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இன்று அதிகாலை முதலே இடியுடன் கூடிய மழை பெய்ததால் 3 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (டிச.9) விடுமுறை விடப்பட்டது.சென்னையிலும் இன்று ஆலந்தூர், பழவந்தாங்கல், ஆதம்பாக்கம், ராமாபுரம், மீனம்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இந்நிலையில், அரபிக் கடலில் உருவாக உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால், சென்னைக்கு ஆபத்தில்லை என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதிப் ஜான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அரபிக்கடலில் உருவாக உள்ள புதிய காற்றழுத்தத்தால் மேற்கு மற்றும் தென் தமிழ்நாடு, ஒரு சில உள்மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதே சமயம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. எனவே செய்திகள் மற்றும் வாட்ஸ்அப் ஃபார்வர்டுகளை பார்த்து பீதி அடைய வேண்டாம். இது சென்னையை பாதிக்காது, என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது வெளியிட்ட அறிக்கையின்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.