சபரிமலையில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக வழங்கப்பட வில்லை என்றும் பாதுகாப்பு இல்லை என்றும் பக்தர்கள் குற்றச்சாட்டு.கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். அந்த வகையில் இந்தாண்டு கடந்த ஆண்டை விட அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.
இதனால் கூட்ட நெரிசலில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக வழங்கப்பட வில்லை என்றும் பாதுகாப்பு இல்லை என்றும் பக்தர்கள் குற்றஞ்சாட்டி இருந்தனர். இது தொடர்பாக தமிழக பக்தர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், ஸ்டாலின் உத்தரவின் பேரில் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, கேரள மாநில தலைமைச் செயலாளர் வி.வேணுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலினின் கோரிக்கை ஏற்று, சபரிமலை வரும் தமிழ்நாடு ஐயப்ப பக்தர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதாகவும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும் கேரள அரசு உறுதி அளித்துள்ளது.