"விஜயகாந்த் நிஜத்திலும் கேப்டன்தான். சினிமாவிலும் அரசியலிலும் கேப்டனாக இருந்தவர் விஜயகாந்த். திரைப்படங்களில் அவரது செயல்பாடுகள் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர்." என்று பிரதமர் மோடி கூறினார். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையம் திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது மறைந்த நடிகரும், தே.மு.தி.க நிறுவனத் தலைவருமான விஜயகாந்த்தை நினைவுகூர்ந்து பேசினார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி பேசுகையில், "விஜயகாந்த் நிஜத்திலும் கேப்டன்தான். சிறந்த தேசியவாதியாக திகழ்ந்தவர். சினிமாவிலும் அரசியலிலும் கேப்டனாக இருந்தவர் விஜயகாந்த். திரைப்படங்களில் அவரது செயல்பாடுகள் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர். அரசியல்வாதியாக தேசிய நலனை மட்டுமே முன்னிறுத்தினார்." என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "மழை, வெள்ளம் காரணமாக, தமிழக மக்கள் கடந்த ஆண்டு கடுமையான துயரத்தை அனுபவித்தீர்கள். அதிக வலியை அனுபவித்தீர்கள். இந்தத் துயரமான நேரத்தில் தமிழகத்துக்கு மத்திய அரசு உறுதுணையாக இருந்து வருகிறது.
தமிழகத்துக்கு வந்தால் புதிய சக்தி கிடைக்கிறது. 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும். திருச்சி என்று சொன்னாலே, அங்கிங்கெனாதபடி எல்லா இடங்களிலும் சிறப்பான விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன" என்றும் அவர் கூறினார்.