“சிவில் சர்வீசஸ் தேர்வுகளை அனைத்து மொழிகளிலும் எழுத அனுமதித்துள்ள நிலையில், கேள்வித் தாள்களை அந்தந்த மொழிகளில் ஏன் வழங்கக் கூடாது?” என மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கு பயிற்சி அளிக்கும் மதுரையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அந்த மனுவில், “ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வுகளை, மாநில மொழிகளில் எழுத அனுமதியளித்துள்ள நிலையில், கேள்வித் தாள்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே வழங்கப்படுகிறது. அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மாநில மொழிகளிலும் இந்த தேர்வுகளுக்கான கேள்வித்தாள்களை வழங்க உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனிடையே, சிவில் சர்வீஸ் உட்பட தங்களது அனைத்து தேர்வுகளும் விதிகளின் படியே நடத்தப்படுகிறது என மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது, “சிவில் சர்வீஸஸ் தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது” என சுட்டிக் காட்டிய தலைமை நீதிபதி, “கேள்வித் தாள்களை அந்தந்த மொழிகளில் வழங்கலாமே?” என கேள்வி எழுப்பி, வழக்கு விசாரணையை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.