தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திரா உயர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. இவர், திறன் மேம்பாடு ஊழல் வழக்கில் செப்.9ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார்.
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு, ஆந்திரா உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (அக்.31) இடைக்கால பிணை வழங்கியது.சந்திரபாபுவின் வயது மற்றும் உடல் நிலையை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்றம் தனது உத்தரவில், நவ.28ஆம் தேதி சந்திரபாபு நாயுடு சரணடைய வேண்டும் என்றும் கூறியுள்ளது.
ஆந்திரா திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடு செப்.9ஆம் தேதி கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது 53 நாள்கள் சிறைவாசம் முடிந்து வீடு திரும்ப உள்ளார். இதற்கிடையில் சந்திரபாபு நாயுடுவின் முதன்மை பிணை நவ.10ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.பிணை கிடைத்ததை தொடர்ந்து சந்திரபாபு நாயுடு ஹைதராபாத் இல்லத்தில் ஓய்வெடுப்பார் என்று கூறப்படுகிறது.
மேலும் அரசியல் பொதுக்கூட்டம் மற்றும் டெலிபோனில் பேச்சு கூடாது என்றும் நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது. சந்திரபாபு நாயுடுவுக்கு 72 வயது ஆகிறது.அவருக்கு தோல் சம்பந்தப்பட்ட பிரச்னையும் உள்ளது. இது சிறையில் அவருக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியது. சந்திரபாபு நாயுடு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவரது மனைவி புவனேஸ்வரி தொண்டர்களை சந்தித்துவந்தார்.கட்சி கூட்டங்களில் நாயுடு மகன் லோகேஷ் கலந்துகொண்டார். மேலும் சந்திரபாபு நாயுடுக்கு நீதி வேண்டும் என அவரது மனைவி புவனேஸ்வரி திருப்பதியில் யாத்திரையை தொடங்கி நடத்திவருகிறார்.
இதற்கிடையில் திங்கள்கிழமை (அக்.30) ஆந்திரா சிஐடி போலீசார் சந்திரபாபு நாயுடு மீது வழக்குப்பதிவு செய்தனர். அதாவது, மதுபான தயாரிப்புக்கு உரிமம் வழங்கியதில் ஊழல் நடைபெற்றதாக வழக்கு ஒன்றில் நாயுடு பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.