சென்னை நந்தனம் பகுதியில் நடைபெற உள்ள இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சிக்கு சென்னை காவல்துறை நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளது.
சென்னையில் நடைபெற உள்ள இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சிக்கு சில நிபந்தனைகளுடன் சென்னை காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஹாரிஸ் ஜெயராஜ். 2001-ம் ஆண்டு வெளியான மின்னலே படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு வெளியான லெஜண்ட் படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இதனிடையே ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சென்னை காவல்துறையில் மனு அளித்திருந்தனர். இந்த மனுவை பரிசீலனை செய்த காவல்துறை அதிகாரிகள், குறிப்பிட்ட சில நிபந்தனைகளுடன் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.
அதன்படி, அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக டிக்கெட் விற்கக் கூடாது. டிக்கெட் எண்ணிக்கைக்கு ஏற்ப இருக்கை வசதி செய்து தர வேண்டும். வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகளை உறுதி செய்து இசை நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், 20 ஆயிரம் பார்வையாளர்கள் பங்கேற்கும் வசதி கொண்ட இந்த மைதானத்தில் இதுவரை 15 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை ஈசிஆர் சாலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில், டிக்கெட் இருந்தும் பல ரசிகர்கள் இசை நிகழ்ச்சியை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சிக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.