சென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி உள்பட 11 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி உள்ளது. இதையொட்டி பல்வேறு மாவட்டங்களில் கடந்த 1 வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று (ஆக்.29) 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 3 மணிநேரத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் சில இடங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருச்சி, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேபோல காரைக்காலிலும் கூட அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நிலவரம்
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.