உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி; டிரஸ்ஸிங் ரூம் சென்று வீரர்களுக்கு ஆறுதல் கூறிய மோடி.ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் நடந்த 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணியின் மோசமான தோல்வியைத் தொடர்ந்து நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் உள்ள இந்திய டிரஸ்ஸிங் அறைக்கு சென்று வீரர்களுக்கு ஆறுதல் கூறிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திங்களன்று, ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் இந்த உலகக் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது ஷமி, தோல்விக்குப் பிறகு டிரஸ்ஸிங் ரூமுக்கு பிரதமர் மோடியின் வருகை தந்திருந்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர்."துரதிர்ஷ்டவசமாக நேற்று எங்கள் நாள் அல்ல. போட்டி முழுவதும் எங்கள் அணிக்கும் எனக்கும் ஆதரவாக இருந்த அனைத்து இந்தியர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். பிரத்யேகமாக டிரஸ்ஸிங் ரூமுக்கு வந்து எங்கள் நம்பிக்கையை உயர்த்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. நாங்கள் மீண்டு வருவோம்!” என்று முகமது ஷமி பதிவிட்டுள்ளார். முகமது ஷமி இந்த உலகக் கோப்பையில் ஒரே போட்டியில் ஏழு விக்கெட்கள் உட்பட 24 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, அதிக விக்கெட் எடுத்தவராக திகழ்கிறார். மேலும் ODI உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவிற்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலராகவும் முகமது ஷமி உள்ளார்.
"எங்களுக்கு இந்த தொடர் சிறப்பானதாக இருந்தது, ஆனால் நாங்கள் நேற்று அதை முடித்துவிட்டோம். நாங்கள் அனைவரும் மனம் உடைந்துள்ளோம், ஆனால் எங்கள் மக்களின் ஆதரவு எங்களை தொடர்ந்து முன்னோக்கி கொண்டு செல்கிறது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று டிரஸ்ஸிங் ரூமுக்கு வந்தது சிறப்பானது மற்றும் ஊக்கமளிப்பதாக இருந்தது” என்று ஜடேஜா பகிர்ந்து கொண்டார்.
பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ் உடன் இணைந்து, இறுதி விழாவில் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸிடம் உலகக் கோப்பையை வழங்கினார்.இது ஆஸ்திரேலியாவுக்கு ஆறாவது ஒருநாள் உலகக் கோப்பை வெற்றியாகும், மேலும் 2015 இல் சொந்த மண்ணில் விளையாடி உலகக் கோப்பையை வென்ற அணியில் ஒரு பகுதியாக இருந்த பாட் கம்மின்ஸுக்கு இது இரண்டாவது வெற்றியாகும்.