தி.மு.க-வின் இந்த இரண்டரை ஆண்டுகால ஆட்சியின் சாதனை என்பது அவர்கள் ஊழல் செய்ததே என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி குற்றவாளிகள் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர்களுக்கான தண்டனை விவரங்களை இன்று அறிவித்தது.
அதன்படி, இந்த வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், தி.மு.க-வின் இந்த இரண்டரை ஆண்டுகால ஆட்சியின் சாதனை என்பது அவர்கள் ஊழல் செய்ததே என்றும், தி.மு.க-வில் இன்னும் பல்வேறு அமைச்சர்கள் கைது செய்யபடுவார்கள் என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கரிப்பட்டினத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியின் தந்தையின் மறைவிற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, சென்னை கனமழை பெய்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விதித்தது. ஆனால் இந்த அரசு அதனை அலட்சிய படுத்திய காரணத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டனர். தேவையான முன்னெச்சரிக்கை எடுக்காததால் அதிகளவிலான பாதிப்புகள் ஏற்பட்டது.
ஆனால் அ.தி.மு.க ஆட்சியில் பருவகாலம் தொடங்குவதற்கு ஒரு மாதங்களுக்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கப்பட்டது. ஆனால் இந்த அரசு சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் வானிலை ஆய்வு மையத்தின் மீது பழி சுமத்த முயல்கிறது .மேலும் தி.மு.க-வின் இந்த இரண்டரை ஆண்டுகால ஆட்சியின் சாதனை என்பது அவர்கள் ஊழல் செய்ததே ஆகும். எனவே, தி.மு.க-வில் இன்னும் பல்வேறு அமைச்சர்கள் கைது செய்யபடுவார்கள். எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டம் நடைபெறுமா என்பதே சந்தேகமாக உள்ளது, என்றும் அவர் கூறினார்.