கார்த்தியின் 25வது படமாக மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்துள்ள "ஜப்பான்" படத்தின் முழு விமர்சனம்.
கதைக்களம் :
கோவையில் ஒரு பிரமாண்ட நகைக்கடையில் ரூ. 200 கோடி மதிப்புள்ள நகைகள் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்படுகிறது. உள்துறை அமைச்சரின் குடும்பத்துக்கும் இந்த கடையில் பங்கு உள்ளதால் போலீஸ் தீவிரமாக களம் இறங்குகிறது. ஒருபக்கம் சுனில் வர்மா, மறுபக்கம் விஜய் மில்டன் தலைமையிலான போலீஸ் குழு விசாரணை நடத்தி மெகா கொள்ளையன் ஜப்பான் (கார்த்தி) தான் இதை செய்தது என கண்டுபிடிக்கிறார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் கார்த்தி இதை செய்யவில்லை என தெரியவர, அடுத்தடுத்து வரும் திருப்பங்கள் தான் மீதி கதை.
நடிகர்களின் நடிப்பு :
நடை, உடை, பாவனை, குரல் என அனைத்திலுமே வித்தியாசம் காட்டி நடிப்பில் அமர்க்களம் செய்திருக்கிறார் கார்த்தி. ஜித்தன் ரமேஷ் வில்லனாக கலக்கியிருக்கிறார்.
மேலும் விஜய் மில்டன், சுனில், வாகை சந்திரசேகர், அனு இம்மானுவேல் ஆகியோரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர்.
இயக்கம் மற்றும் இசை :
ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை படத்திற்கு பெரிய பலம்.பாடல்களும் கேட்கும் ரகம். வித்தியாசமான கதைகளை தொடர்ந்து மக்களுக்கு கொடுக்கும் இயக்குனர் ராஜு முருகனின் மற்றொரு வித்தியாசமான முயற்சி.
படம் எப்படி :
ஆரம்ப காட்சிகளில் பரபரப்பாக தொடங்கும் கதைக்களம் அதன்பிறகு காட்சிகள் செல்ல செல்ல படத்தின் விறுவிறுப்பும் குறைகிறது. ஆங்காங்கே வரும் கலகலப்பான காட்சிகள் சற்று ஆறுதல். இடைவேளை டுவிஸ்ட் சிறப்பு. பல இடங்களில் கதையை தாண்டி படம் எங்கெங்கோ பயணிக்கிறது. எமோஷனல் காட்சிகள் பெரிய அளவில் எடுபடவில்லை. ஆங்காங்கே வரும் அரசியல் வசனங்கள் பளார். ராஜு முருகனின் முந்தைய படங்களில் இருந்த அழுத்தமும், ஏதார்தமும் மிஸ்ஸிங். மொத்தத்தில் தீபாவளிக்கு ஒரு சுமாரான படமாக ஜப்பான் வெளிவந்துள்ளது.