கோவையில் ஆட்சியர் அலுவலகம் வந்த மூதாட்டிக்கு உதவி அவரை தனது சொந்த செலவில் பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்த காவல் உதவி ஆய்வாளரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை ரங்கே கவுண்டர் பகுதியில் வசித்து வரும் 85 வயது மதிக்கத்தக்க ஜன்னிலா என்கிற மூதாட்டி மகளிர் உரிமைத் தொகை தனக்கு வரவில்லை என்றும் அதற்கான விபரத்தை அறிவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று (டிச.11) வந்துள்ளார்.
விவரம் அறிந்து விட்டு நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருந்த அந்த மூதாட்டியை அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் அன்பழகன் மூதாட்டியிடம் விசாரித்து வீட்டு முகவரியை கேட்டு கை தாங்கலாக கூட்டி சென்று சொந்த செலவில் ரூ.200 ஆட்டோக்கு கொடுத்து அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
இந்த மூதாட்டியின் மகன் இறந்து விட்டார் என்பதும் இவரை கவனித்துக் கொள்ள யாரும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மூதாட்டி நிலையறிந்து தானாகவே முன்வந்து உதவிய உதவி ஆய்வாளரின் செயல் அனைவரின் மத்தியில் பாராட்டையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.