இந்தோனேசியாவின் பாலி நகரில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏ.சி.சி) பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருக்கும் ஜெய் ஷா-வின் பதவிக்காலம் மேலும் 1 ஆண்டுக்கு நீட்டிக்கப்படுவதாக ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஏ.சி.சி தலைவரின் பதவிக்காலம் 2 ஆண்டுகள், அதில் தற்போது ஜெய் ஷா 2-வது ஆண்டில் இருக்கிறார். இந்நிலையில் அவரது பதவிக்காலம் மேலும் 1 ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளரான ஷா, 2021 ஜனவரியில் முதல் முறையாக ஏ.சி.சி-யின் தலைவராக பொறுப்பேற்றார்.
இது தொடர்பாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஜெய் ஷாவின் நீடிப்பு இலங்கை கிரிக்கெட் (எஸ்.எல்.சி) தலைவர் ஷம்மி சில்வாவினால் இரண்டாவது முறையாக முன்மொழியப்பட்டது மற்றும் ஏ.சி.சி-யின் அனைத்து உறுப்பினர்களாலும் ஏகமனதாக பரிந்துரைக்கப்பட்டது." என்று தெரிவித்துள்ளது.