ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் க்ளென் மேக்ஸ்வெல் காயம் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பேட் கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலியா அணி களமாடி வருகிறது. இதுவரை 6 போட்டிகளில் ஆடியுள்ள ஆஸ்திரேலியா 4ல் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அரையிறுதிக்கு முன்னேற மீதமுள்ள 3 போட்டிகளில் வெற்றி பெறும் வேடகையில் உள்ளது.
இந்நிலையில், வருகிற சனிக்கிழமை (நவம்பர் 04ம் தேதி) அன்று அகமதாபாத்த்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அரங்கேறும் 36வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அதன் பரம எதிரியான இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இப்போட்டியானது பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.
இந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் க்ளென் மேக்ஸ்வெல் காயம் காரணமாக விலகியுள்ளார். மேக்ஸ்வெல் கடந்த திங்கள்கிழமை கோல்ஃப் வண்டியின் பின்புறத்திலிருந்து விழுந்துள்ளார். இதனால் அவருக்கு மூளையதிர்ச்சி மற்றும் முகத்தில் சிராய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அகமதாபாத்தில் கோல்ஃப் விளையாடிக்கொண்டிருந்த வீரர்களின் குழுவில் ஒருவராக மேக்ஸ்வெல் இருந்துள்ளார். இந்த சம்பவம் மாலை நேரத்தில் நடந்துள்ளது. அதே நேரத்தில் வேறு எந்த வீரரும் காயமடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
35 வயதான மேக்ஸ்வெல் நடப்பு உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிராக 40 பந்துகளில் சதம் விளாசி மிரட்டினார். இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேக சதம் அடித்த முதல் வீரர் என்கிற சாதனையைப் படைத்தார். தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 24 பந்துகளில் 41 ரன்களை அதிரடியாக எடுத்தார். தற்போது இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இருந்து அவர் விலகி இருப்பது ஆஸ்திரேலிய அணிக்கு சற்று பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.