தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை தொழில் நகரமாக உள்ளது. குறிப்பாக சென்னையை அடுத்து கோவையில் அதிக மக்கள் வசித்து வருகின்றனர்.அதே போல கோவை மாநகராட்சிக்கு உட்பட இடங்களை அழகுபடுத்தும் விதமாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு கட்டமைப்புகளை ஏற்படுத்தி சுற்றுலா தலமாக விளங்குவதுடன் மற்ற மாநிலங்களுக்கு கோவை முன் உதாரணமாக உள்ளது.
இதனிடையே கோவை மக்களை மகிழ்விக்கும் வண்ணம் 2024 புத்தாண்டை வரவேற்கும் விதமாக மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி மற்றும் ட்ரம்ப் அமைப்பின் சார்பாக டிசம்பர் 31 ஆம் தேதி மாலை 6 மணி முதல் இரவு 12.30 மணி வரை கோ ஃபிக், கோ கலட்டா எனும் 8-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.குறிப்பாக 20ஆயிரம் எல்இடி கொண்ட லேசர் ஷோ, லியோ பட ஆடியோ வெளியீடு நிகழ்ச்சியில் வருவது போன்ற 300-க்கும் மேற்பட்ட ட்ரோன் ஷோ, நட்சத்திரங்கள் பங்கேற்கும் இசை மற்றும் மேடை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
இது குறித்து, புத்தாண்டு கொண்டாட்டம் குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், “தென்னிந்தியாவில் எங்கேயும் நடத்திடாத வகையில் முதன் முறையாக கோவையில் குடும்பத்துடன் மகிழ்விக்க புதிய ஏற்பாடுகளை செய்துள்ளோம்.இந்த நிகழ்ச்சியில் 50-ஆயிரம் மக்கள் வரை பங்கேற்கலாம். இங்கு வரும் மக்களுக்கு நுழைவு கட்டணம் இல்லை. மதுபானம் ("ஆல்கஹால்") இல்லாமல் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளோம். பொதுமக்களுக்கான பாதுகாப்பு மற்றும் பார்க்கிங் வசதியினை அதிகரித்துள்ளோம்.மேலும் மாநகர காவல் துறையுடன் இணைந்து போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.