இந்திய மண்ணில் விறுவிறுப்பாக அரங்கேறி வரும் 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடரில் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ( நவம்பர் 19 ஆம் தேதி) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அரங்கேறும் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 4வது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதே நேரத்தில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 8வது முறையாக இறுதிப் போட்டி முன்னேறி சாதனை படைத்தது.இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ச்சியாக 10 வெற்றிகளை ருசித்துள்ளது. மறுபுறம், ஆஸ்திரேலியா அதன் தொடக்க இரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்தது. எனினும், அந்த தோல்வியில் இருந்து மீண்டு வந்து தொடர்ந்து 8 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ள ஆஸ்திரேலியா பொருத்தமான அணி என்றாலும், கடந்த கால போட்டி வரலாற்றை புரட்டி பார்க்கும் போது, ஆஸ்திரேலிய அணியே ஆதிக்க சக்தியாக இருந்துள்ளது.
உலகக் கோப்பையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் முதன்முதலில் 1983ம் ஆண்டில் நேருக்கு நேர் மோதின. 11வது லீக் ஆட்டத்தில் சந்தித்துக்கொண்ட இந்த அணிகளில், கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி 162 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 23வது லீக் ஆட்டத்தில் 118 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது. அதன்பிறகு, இரு அணிகளும் ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளில் 13 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 8 வெற்றிகள் மற்றும் 5 தோல்விகளுடன் ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்த இரு அணிகளும் கடந்த 2003 ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவின் வாண்டரர்ஸில் நடந்த இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் குவித்தது. அதனைத் துரத்திய சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் இந்தியாவை 125 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதன்பிறகு, 2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், மீண்டும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மற்றொரு நாக்-அவுட் போட்டியில் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 328 ரன்களை குவித்தது. 329 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய எம்.எஸ் தோனி தலைமையிலான இந்திய அணி 233 ரன்னுக்கு சுருண்டு, 95 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
ஆனால் 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குச் செல்லும் இந்திய அணி சமீபத்திய ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தலைசிறந்த சாதனையைப் பெற்றுள்ளது. அந்த அணிக்கு எதிரான கடைசி நான்கு உலகக் கோப்பை போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. முந்தைய சந்திப்புகளில் கலவையான முடிவுகள் இருந்தாலும், இரு அணிகளும் ஞாயிற்றுக்கிழமை மோதும் போட்டியில் நிச்சயமாக பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.