"சமூக நீதிக்கான எங்கள் இலட்சியத்தைப் பகிர்ந்து கொள்ளும் கட்சியாக நாங்கள் திமுகவைப் பார்க்கிறோம். அதன் தலைவர்கள் இலட்சியத்திற்கு எதிரான விஷயங்களைப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்" என்று தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். இந்தி மொழி பேசும் மக்கள் அடர்த்திய வாழும் பீகார், உத்தரப் பிரதேசத்தில் இந்தி மட்டும் படிக்கும் நபர்கள், தமிழ்நாட்டில் சாலை போடுதல், வீடு கட்டுதல், கக்கூஸ் கழுவுதல் உள்ளிட்ட வேலைகளில் ஈடுபடுகிறார்கள் என திமுக எம்பி தயாநிதி மாறன் பேசியிருந்தார்.
இந்த வீடியோ வட இந்தியாவில் வேகமாக பரவிவருகிறது. இந்தநிலையில் தயாநிதி மாறனின் கருத்துகளை பீகார் துணை முதலமைச்சரும், இந்தியா கூட்டணியில் உள்ளவருமான தேஜஸ்வி யாதவ் கண்டித்துள்ளார்.இது குறித்து தேஜஸ்வி யாதவ் பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், “திமுக எம்பி சாதிய அக்கிரமங்களை முன்னிலைப்படுத்தியிருந்தால், சில சமூகக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இதுபோன்ற அபாயகரமான வேலைகளில் ஈடுபட்டதை அவர் சுட்டிக்காட்டியிருந்தால், அது அர்த்தமுள்ளதாக இருக்கும்.
ஆனால் பீகார் மற்றும் உ.பி.யின் ஒட்டுமொத்த மக்களையும் இழிவாகப் பேசுவது கண்டிக்கத்தக்கது. அதை கண்டிக்கிறோம். நாட்டின் பிற பகுதிகளில் இருந்து வருபவர்களிடம் மக்கள் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும்” என்றார்.தொடர்ந்து, “நமது இலட்சியமான சமூக நீதியைப் பகிர்ந்து கொள்ளும் கட்சியாக திமுகவை நாங்கள் பார்க்கிறோம். அதன் தலைவர்கள் இலட்சியத்திற்கு எதிரான விஷயங்களைப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.