விஜய் - லோகேஷ் கூட்டணியில் வெளியான லியோ படம் வசூலில் சாதனை படைத்து வரும் நிலையில், படத்தின் வெற்றி விழா குறித்து தற்போது முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
/indian-express-tamil/media/media_files/90XiPsknGGi1mHbLg72L.jpg)
தளபதி விஜய் நடித்துள்ள லியோ படம் வசூலில் சாதனை படைத்து வரும் நிலையில், வரும் நவம்பர் 1-ந் தேதி படத்திற்கான வெற்றி விழா நடைபெற உள்ளதாகவும், இதற்காக பாதுகாப்பு கேட்டு சென்னை காவல்துறையில் தயாரிப்பாளர் தரப்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம் லியோ. த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம்மேனன் என இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருந்தனர். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் லியோ படம் கடந்த அக்டோபர் 19-ந் தேதி வெளியானர்.
ரிலீசுக்கு முன்பே முன்பதிவில் சாதனை படைத்திருந்த லியோ படம் முதல் நாளில் 148 கோடி வரை வசூலித்து முதல் நாளில் அதிக வசூலித்த படங்களின் வரிசையில் முன்னிலை பெற்றது. ஆனால் படத்தின் கலவையான விமர்சனங்கள் காரணமாக அடுத்தடுத்த நாட்களில் வசூலில் தோய்வு ஏற்பட்ட நிலையில், முதல் வார முடிவில் லியோ படம் 461 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன் மூலம் சர்வதேச அளவில் அதிக வசூல் செய்த தமிழ் படங்களின் வரிசையில் தற்போது 3-வது இடத்தை பிடித்துள்ள லியோ படத்தின் வெற்றி விழா வரும் நவம்பர் 1-ந் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த விழாவில் நடிகர் விஜய் கலந்துகொள்ள உள்ளதாகவும், இதற்காக பாதுகாப்பு கோரி தயாரிப்பாளர் தரப்பில் இருந்து காவல்துறைக்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே பாதுகாப்பு மற்றும் போலி டிக்கெட் விற்பனை காரணமாக லியோ படத்தில் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்ட நிலையில், வெற்றி விழாவாது நடைபெற வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில், தற்போது வெற்றி விழா குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.