பிரதமர் நரேந்திர மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் அவதூறு கருத்து தெரிவித்தது இருநாடுகளுக்கு இடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மாலத்தீவு அரசு 3 துணை அமைச்சர்களையும் சஸ்பெண்ட் செய்தது. கொரோனா பாதிப்புக்குப் பிறகு, மாலத்தீவுக்கான சுற்றுலா பயணம் அதிகரித்தது. குறிப்பாக இந்தியர்கள் அதிகளவில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றனர். இது தீவு இந்தியப் பார்வையாளர்களை நம்பியிருப்பதை எடுத்துக் காட்டுகிறது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய லட்சத்தீவு பயணம் பேசு பொருளாக மாறியது.பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2-ம் தேதி லட்சத்தீவு பயணம் சென்றார். அங்கு நலத் திட்ட உதவிகள் மற்றும் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அங்குள்ள கடற்கரையில் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டார். தொடர்ந்து, " சுற்றுலா செல்ல விரும்புவோருக்கு லட்சத்தீவு மிகச் சிறந்த இடம்” என்று பதிவிட்டிருந்தார்.
இந்தநிலையில் இந்த பதிவு பெரும் விவாதம் ஆனது. மாலத்தீவு துணை அமைச்சர்கள் மரியம்ஷியுனா, அப்துல்லா மஹ்சூம் மஜித், மால்ஷா ஷெரீப் ஆகியோர் பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து அவதூறு கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். குறிப்பாக, மாலத்தீவுக்கு மாற்றாக லட்சத்தீவை மிகப்பெரிய சுற்றுலா தளமாக மாற்ற பிரதமர் மோடி முயற்சி செய்கிறார் என்று குற்றம்சாட்டினர். இது சமூக வலைதளங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மாலத்தீவு அமைச்சர்களின் கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.