சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரும் குற்றவாளிகள் எனவும் அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன் தீர்ப்பளித்தது. 2006-11-ம் ஆண்டு தி.மு.க ஆட்சி காலத்தில் உயர்கல்வி, கனிமவளத் துறை அமைச்சராக பொன்முடி இருந்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக 2011-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.
வழக்கில் இருவரும் விடுதலை செய்யப்பட்ட நிலையில் 2017-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு செய்தது. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்-ம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார். இந்நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார்.
இந்நிலையில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றதில் மேல்முறையீடு செய்தனர். அப்போது பொன்முடி மற்றும் விசாலாட்சி இருவரும் நீதிமன்றத்தில் சரணடைய கடந்த வெள்ளிக்கிழமை விலக்கு அளிக்கப்பட்டது. இந்நிலையில் மேல்முறையீடு மனு குறித்தான விசாரணையை 2 வாரங்களுக்கு பிறகு பட்டியலிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.