தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மிக்ஜாம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் இன்று (டிசம்பர் 4) சென்னை வழியாக ஆந்திரா கடற்கரை சென்று நாளை (டிசம்பர் 5) நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கிறது. தற்போது மிக்ஜாம் புயல் சென்னைக்கு தென்கிழக்கே 110 கி.மீ தொலைவில், வட தமிழகம், தெற்கு ஆந்திர பகுதியில் நிலைக்கொண்டு உள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு முதலே சூறைக்காற்றுடன் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் ஆறு போல் ஓடிக் கொண்டிருக்கிறது. பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்து, வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது. இதற்கிடையில், இன்று இரவு வரை சென்னையில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. அபுதாபி, துபாய், கொழும்பு, டெல்லி ஆகிய நகரங்களில் இருந்து சென்னை வந்த 8 விமானங்கள் கனமழை மற்றும் காற்றால் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்தன. பின்னர் அந்த விமானங்கள் அனைத்தும் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டன.அதேபோல, சென்னையில் இருந்து துபாய், கொச்சி, விஜயவாடா உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லக்கூடிய 10 விமானங்கள் மற்றும் அந்த நகரங்களில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய 10 விமானங்கள் என மொத்தம் 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், மிக்ஜாம் புயல் எதிரொலியாக சென்னை விமான நிலையம் 2 மணி நேரம் மூடப்படுவதாக என அறிவிக்கப்பட்டது. காலை 9.17 முதல் 11.30 வரை விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமான நிலைய ஓடுதளத்தில் மழைநீர் தேங்கியதால் விமான சேவையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதேபோல், சென்னை ராயப்பேட்டை பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. அ.தி.மு.க அலுவலகம் இருக்கும் சாலை முழுவதும் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது.