திருச்சியில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாள் நாளை கடைபிடிக்கப்படுகிறது. இந்தித் திணிப்புக்கு எதிராகத் தமிழகத்தில் நடந்த 1965-ம் ஆண்டு பெரும் போராட்டங்கள் அதற்கு எதிரான அரசின் அடக்கு முறையில் பல உயிர்ப் பலிகள் என்று 1965-ம் ஆண்டில் நடந்த போராட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. 1965 போராட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டே ஜனவரி 25-ம் நாளை மொழிப்போர் தியாகிகள் தினம் என்று திராவிடக் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் கடைப்பிடிக்கின்றன.
அந்த வகையில், திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திமுகவினருக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது; திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் நினைவு ஊர்வலம் நாளை 25.01.2024 வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் கோஹினூர் திரையரங்கம் அருகில் இருந்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், கழக முதன்மை செயலாளருமான கே.என். நேரு தலைமையில் புறப்பப்பட்டு தென்னுர் உழவர் சந்தை அருகில் உள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவிடம் சென்றடைந்து அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்படும்.
அதனை தொடர்ந்து திருச்சி கிழக்கு மாநகரம் கலைஞர் நகர் பகுதி கழகத்தின் சார்பில் கல்லுக்குழி பழைய ஆர்.டி.ஓ. அலுவலகம் சாலையில் மாலை 6:00 மணிக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெறுகின்றது.இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட ,வார்டு, கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், மாநகராட்சி, ஒன்றிய நகர, பேரூர் கழக சேர்மன்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்” என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.