மக்களவை தேர்தலுக்கு தயாராகி வரும் அ.தி.மு.க அதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையின் பணிகளை ஒருங்கிணைக்க அதிமுக ஐடி விங் கனெக்ட் என்ற மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது.இந்தியாவில் மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேசிய கட்சிகள் முதல் மாநில கட்சிகள் வரை அனைவருமே தேர்தலுக்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதில் ஏற்கனவே காங்கிரஸ் சார்பில், ராகுல்காந்தி குமரி முதல் இமயம் வரை பாத யாத்திரை மேற்கொண்ட நிலையில், தற்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
அதேபோல் ஆளும் திமுக சார்பில் பூத் கமிட்டி மற்றும் வாக்காளர்கள் பட்டியலை சரிபார்க்கும் பணிகள் என தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர். அந்த வகையில் தற்போது தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான அதிமுக தேர்தல் பணிகளில் தீவிரம் காட்சி வரும் நிலையில், அதிமுக ஐடி விங்-ஐ எளிமையாக தொடர்புகொள்ள அதிமுக ஐடி விங் கனெக்ட் என்ற மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இது குறித்து அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில்.
“எங்களுக்கு கட்சியில் 17 பிரிவுகள் உள்ளன, ஒவ்வொன்றும் அதன் சொந்த உத்திகளைக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. ஆனால் நாங்கள் அனைவரும் 2024 தேர்தலை நோக்கி உழைத்து வருகிறோம். புதுப்பிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மூலம், தலைமையின் செய்திகளை வாக்காளர்களுக்கு எவ்வாறு திறம்பட எடுத்துச் செல்வது என்பது குறித்தும், கவனம் செலுத்த வேண்டிய ஆலோசனைகளையும், பகுதிகளையும் பொதுச் செயலாளர் (எடப்பாடி கே. பழனிசாமி) எங்களுக்குத் கொடுத்துள்ளார். மேலும் வரவிருக்கும் தேர்தலைக் கருத்தில் கொண்டு அதிமுக ஐடி பிரிவு மறுசீரமைக்கப்படுகிறது என்று கூறிய சத்யன், உள் தொடர்பு நோக்கங்களுக்காக இந்த செயலி தொடங்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த செயலி அறிமுக நிகழ்ச்சியில், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், சேலம், ஈரோடு, கோவை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாநிலப் பொறுப்பாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள் உட்பட 250 பேர் கலந்துகொண்டனர். இது புரட்சித் தமிழரின் மாஸ்டர் கிளாஸ் என தலைப்பிடப்பட்டது மற்றும் ஃபோகஸ் (லோக்சபா தேர்தல் 2024-ல் கவனம் செலுத்துகிறது) என்ற கோஷம் மக்களவைத் தேர்தல் 2024 என்று இருந்தது.தமிழகத்தில் கடந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலை பாஜக கூட்டணியுடன் சந்தித்த அதிமுக, காவி கட்சியின் மாநிலத் தலைமை கட்சியையும், அதன் சித்தாந்தத்தையும், எம்.ஜி. ராமச்சந்திரன், ஜெ.ஜெயலலிதா போன்ற தலைவர்களையும் இழிவுபடுத்துவதாகக் கூறி கடந்த ஆண்டு கூட்டணியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.