ராகுல் டிராவிட் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பை வரை தலைமைப் பயிற்சியாளராகத் தொடர வேண்டும் என பி.சி.சி.ஐ விரும்புகிறது. இந்திய மண்ணில் பரபரப்பாக நடைபெற்ற 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா 6வது முறையாக உலகக் கோப்பையை வென்றது. 10 போட்டிகளை தொடர்ச்சியாக வென்ற ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையில் ஆழ்த்தியது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணிக்கு 3 ஃபார்மெட்டுகளிலும் பயிற்சியாளராக இருந்து வரும் ராகுல் டிராவிட் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பை வரை தலைமைப் பயிற்சியாளராகத் தொடர வேண்டும் என பி.சி.சி.ஐ விரும்புவதாக தகவல் கிடைத்துள்ளது. இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஆஷிஷ் நெஹ்ரா டி20 ஃபார்மெட்டுக்கு மட்டும் தலைமைப் பயிற்சியாளரை பொறுப்பேற்கும் வாய்ப்பை நிராகரித்ததால், டிராவிட் உடன் தொடரும் முடிவை எடுத்துள்ளது.
இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் அடுத்த டி20 உலகக் கோப்பை வரை டிராவிட் தொடர வேண்டும் என்று கருதுவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டது. டிராவிட் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டால், பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் போன்ற துணை ஊழியர்களின் முக்கிய ஒப்பந்தங்களும் புதிய ஒப்பந்தங்கள் வழங்கப்படும்.உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியடைந்த பிறகு, டிராவிட் இந்திய பயிற்சியாளராக தொடர விரும்புகிறாரா என்பது குறித்து ‘எனக்கு யோசிக்க நேரமில்லை’ என்றார்.