சென்னையைப் பொறுத்தவரையில் தாழ்வான பகுதிகளில், குறிப்பாகப் புறநகர்ப் பகுதிகளில் தான் மின் இணைப்பு பாதிக்கப்பட்டுள்ளது; முழுமையான மின் விநியோகம் எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி மழைநீர் தேங்காத பகுதிகளில் மின் விநியோகத்தை முழுமையாக வழங்க முயற்சி செய்து வருகிறோம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடந்த 2 மழை கொட்டி தீர்த்தது. இதனால், பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. சென்னையின் பல்வேறு இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. திங்கட்கிழமை இரவு முதல் மழை நின்ற நிலையில், மழைநீரை அகற்ற மாநகராட்சி பணியாளர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். அதேபோல் மின் விநியோகத்தை சீரமைக்க மின் வாரிய பணியாளர் பணியாற்றி வருகின்றனர். வெளிமாவட்டங்களில் இருந்து பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்தநிலையில், சென்னை எழிலகத்தில் நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது; சென்னையில் மின் விநியோகத்தைச் சீரமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. ஒரே பகுதியில் ஒரு இடத்தில் நீர் தேங்கி உள்ளது. மற்றொரு இடத்தில் நீர் தேங்கவில்லை என்ற சூழலே உள்ளது. அதுபோன்ற இடங்களில் எங்கெல்லாம் மழை நீர் தேங்கவில்லையோ... அங்கெல்லாம் மட்டும் மின் விநியோகத்தை மீண்டும் வழங்கி வருகிறோம்.
தண்ணீர் வடியாத இடங்களில் மட்டும் மக்கள் நலன்கருதி மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கி இருக்கும் இடங்களில் உயிர்சேதம் ஏற்படாதவாறு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மழைநீர் தேங்காத பகுதிகளில் மின் விநியோகத்தை முழுமையாக வழங்க முயற்சி செய்து வருகிறோம். தண்ணீர் தேங்கி உள்ள பகுதிகளில் ஆபத்தை கருத்தில் கொண்டு நிதானமாக பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்களும் சூழலைப் புரிந்துகொண்டு மின் விநியோக நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சென்னையைப் பொறுத்தவரையில் தாழ்வான பகுதிகளில், குறிப்பாகப் புறநகர்ப் பகுதிகளில் தான் மின் இணைப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மின் நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் 6,703 மின்வாரிய பணியாளர்கள், 393 பொறியாளர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூரில் மின் சேவையை சரி செய்ய 1,050 பணியாளர்கள் பிற மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். துணை மின் நிலையங்கள் வாரியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.சென்னையில் இன்று மாலைக்குள் மின்விநியோகம் சீராகும். மழைநீர் தேங்காத பகுதியில் பிற்பகலுக்குள் மின்சாரம் வழங்கப்படும். பல பகுதிகளில் மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளது நேற்று 120 மெகாவாட் மின் நுகர்வு இருந்த நிலையில், இன்று 400 மெகா வாட் ஆக அதிகரித்துள்ளது. மின் உற்பத்தி நிலையங்களில் எந்த பாதிப்பும் இல்லை. இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.