சென்னை மழை வெள்ள நிவாரணப் பணிகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். முன்னதாக ராஜ்நாத் சிங் வெள்ளப் பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்தினார்.சென்னையில் மிர்ஜாம் புயல் மழை காரணமாக பல்வேறு இடங்கள் நீரில் மிதக்கின்றன. மக்கள் அன்றாட பொருள்களுக்கு அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.பல்வேறு இடங்களில் தன்னார்வலர்கள் உதவிகளை செய்துவருகின்றனர். இந்த நிலையில் இன்று சென்னையில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராணுவ ஹெலிகாப்டரில் பார்வையிட்டார்.
தொடர்ந்து அவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். அப்போது பாதிப்புகள், நிவாரண பணிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மு.க. ஸ்டாலின், “இந்த பெரும் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அனைத்து நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் எடுத்துவருகிறோம்.இந்தப் பணிகளில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் என அனைவரும் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவருகிறோம்” என்றார்.
தொடர்ந்து, “தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது” என்றார். மேலும், நிவாரண உதவிகளை வழங்க தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.5,060 கோடியை வழங்க வேண்டும்” என்றார். மேலும், “முதற்கட்டமாக ரூ.450 கோடி அளித்ததற்காக பிரதமருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.