டிஎன் பிரதாபன், ஹிபி ஈடன், ரம்யா ஹரிதாஸ், டீன் குரியகோஸ் மற்றும் ஜோதிமணி ஆகியோர் நடந்து வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் எஞ்சிய காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர். நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு மீறல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அறிக்கையை வெளியிடக் கோரி நடவடிக்கைகளை முடக்கியதற்கு மத்தியில் 14 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்யும் தீர்மானங்களை மக்களவை வியாழக்கிழமை (டிச.14) நிறைவேற்றியது.
இதையடுத்து, தவறான நடத்தை மற்றும் தலைவரின் அதிகாரத்தை அலட்சியம் செய்தல் உள்ளிட்ட குற்றஞ்சாட்டுகளின் பேரில் காங்கிரஸ் எம்.பி.க்கள் டி.என்.பிரதாபன், ஹிபி ஈடன், ரம்யா ஹரிதாஸ், டீன் குரியகோஸ், ஜோதிமணி ஆகியோர் நடந்து வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் எஞ்சிய காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.பின்னர், காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், பென்னி பெஹனன், கே.ஸ்ரீகண்டன் மற்றும் முகமது ஜாவேத்; சிபிஎம் எம்பிக்கள் பி.ஆர்.நடராஜன், எஸ்.வெங்கடேசன், திமுகவின் கனிமொழி, எஸ்.ஆர்.பார்த்திபன், சி.பி.ஐ.யின் கே.சுப்பராயன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஒரு தீர்மானத்தை முன்வைத்தார். தொடர்ந்து, பிற்பகல் 3 மணிக்கு சபை மீண்டும் தொடங்கியபோது, மேலும் ஒன்பது எம்.பி.க்களை இடைநீக்கம் செய்வதற்கான தனித் தீர்மானத்தை ஜோஷி முன்வைத்தார். குரல் வாக்கெடுப்பு மூலம் பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, சபை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.