வெள்ள நிவாரணம் உடனடி தேவை, அதை தாமதப்படுத்த முடியாது. நிவாரண நிதியை ரொக்கமாக வழங்கலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக டிசம்பர் முதல் வாரத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலை, வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. பலர் தங்களது வீடுகளையும், பொருட்களையும் இழந்து தவித்து வருகின்றனர். மக்கள் இயல்பு நிலைக்கு மெல்ல மீண்டு வருகின்றனர். இந்நிலையில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று முதல் இதற்கான டோக்கன் விநியோகிக்கும் பணித் தொடங்கியது.
இந்நிலையில், வெள்ள நிவாரணத் தொகையை ரொக்கமாக வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வங்கி கணக்குகளில் நேரடியாக பணத்தை செலுத்த வேண்டும் என்று கோரியும் ரொக்கம் பணத்தை அதிகரிக்க கோரியும் மோகன்தாஸ், செல்வக்குமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனு இன்று (டிச.15) தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, "வெள்ள நிவாரணம் உடனடி தேவை. அதை தாமதப்படுத்த முடியாது. வெள்ள நிவாரணம் ரூ.6000- ஐ ரொக்கமாக வழங்கலாம். வெள்ள நிவாரணம் தகுதியானவர்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். நிதியை தாமதப்படுத்துவது மக்கள் நலனுக்கு உகந்ததல்ல. நிவாரணம் வழங்கியது குறித்து தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.வழக்கில் இடைக்கால தடை விதிக்க முடியாது " என்றும் நீதிமன்றம் கூறியது.