சென்னையில், பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய தேவைகளுக்கு கூட மக்கள் வெளியில் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ள நிலையில், நடிகை நமிதாவின் வீட்டில் 6 அடி உயரத்திற்கு வெள்ளம் சூழ்ந்துள்ளதால் 2 குழந்தைகளுடன் தத்தளித்து வருகிறார்.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் என்ற புயலாக மாறியதை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக வீடுகளில் வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னையில், பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய தேவைகளுக்கு கூட மக்கள் வெளியில் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வருபவர்கள் கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டு வந்த மழையை விட இந்த ஆண்டு அதிக மழை பெய்துள்ள நிலையில், பெரும் வெள்ளம் காரணமாக போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.
கடந்த இரு தினங்களாக மக்களை மிரட்டி வந்த மிக்ஜாம் புயல் தற்போது ஆந்திரா நோக்கி நகர்ந்து கரையை கடந்துள்ளதால் மக்கள் நிம்மதியடைந்துள்ள நிலையில், சென்னையில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து சென்னை மாநகராட்சி சார்பில், தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணி துரிதப்பட்டுத்தப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நீர்வரத்து அதிகரித்தால், பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி உடைத்து அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பள்ளிக்கரணை, துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள்ம் சூழ்ந்துள்ள நிலையில், துரைப்பாக்கம் எக்ரட் பார்க் குடியிருப்பில் 6 அடி உயரத்திற்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த குடியிறுப்பில் தனது இரு குழந்தைகள் மற்றும் கணவருடன் வசித்து வந்த நடிகை நமீதா வெள்ளத்தில் சிரமப்பட்டு வருகிறார்.அந்த குடியிருப்பு பகுதியில் உள்ள மக்களை மீட்க இன்னும் மீட்பு படையினர் வராததால், நமீதா உட்பட பொதுமக்கள் பலரும் கடுமையான சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.