எதிர்காலத்தில் ஓ.பி.எஸ் உடன் இணைந்து செயல்பட முடிவு எடுத்துள்ளதாக டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.மறைந்த முன்னாள் முதலவர் ஜெயலலிதா மறைந்த பிறகு, அ.தி.மு.க-வில் அதிக குழப்பங்கள் ஏற்பட்டன. தொடர்ந்து இ.பி.எஸ் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். ஓ.பி.எஸ் துணை முதல்வராகவும், இ,பி.எஸ் முதல்வராகவும் செயல்பட்டார். ஆனால் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ்-க்கு தொடர்ந்து கருத்து வேறுபாடு இருந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு அதிமுக பொதுக்குழு நடைபெற்று ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை இ.பி.எஸ் கட்சியிலிருந்து நீக்கினார். மேலும் இதற்கு எதிராக ஓ.பி.எஸ் தொடர்ந்து பல வழக்குகளில் இ.பி.எஸ்-க்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது.
இந்நிலையில் கடலூரில் செய்தியாளர்களிடம் டி.டி.வி தினகரன் பேசியதாவது: “ தமிழ்நாடு மக்களின் நலனுக்கு எதிராக எந்த கட்சி செயல்பட்டாலும் அவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என உறுதியாக தெரிவித்து இருந்தேன். விவசாயிகளை, தமிழ்நாட்டு மக்களை பாதிக்கும் திட்டங்களையும், ஸ்டெர்லைட், மீத்தேன் ஹைட்ரோ கார்பன் போன்றவற்றையும் தமிழ்நாட்டில் மத்திய அரசு திணிக்கிறது.
தமிழ்நாட்டில் மக்கள் விரும்பாத திட்டங்களை இங்கே திணிப்பதில்லை என நிலைபாட்டை மத்திய அரசு தற்போது எடுத்துள்ளதாக தெரிகிறது. ஓ.பன்னீர்செல்வமும், நானும் வருங்காலத்தில் அரசியலில் இணைந்து செயல்பட வேண்டும் என முடிவை எடுத்துள்ளோம். கூட்டணி பற்றி உரிய நேரத்தில் முடிவை அறிவிப்போம். திருவள்ளுவர் காவி உடை விவகாரத்தில் ஆளுநர் அவரது பதவிக்கு இழுக்கு ஏற்படுத்தும் விதமாக உள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.