சென்னை கோட்டூர்புரம் பாரதி அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டாள். இவர் பா.ஜ.க மாவட்ட துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். கடந்த ஜனவரி 19 ஆம் தேதியன்று பிரதமர் மோடி, சென்னை வந்தபோது சித்ரா நகரில் இருந்து ஆட்களை அழைத்து வருவது சம்பந்தமாக ஆண்டாளுக்கும், பா.ஜ.க மகளிர் அணி நிர்வாகி நிவேதாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கடந்த 21 ஆம் தேதி இரவு பா.ஜ.க நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியின் கார் ஓட்டுநர் ஸ்ரீதர், பா.ஜ.க மகளிர் அணியைச் சேர்ந்த நிவேதா, கஸ்தூரி மற்றும் அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் ஆண்டாள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த தேவி மற்றும் அவரது தங்கை ஆண்டாள் ஆகியோரை தாக்கியுள்ளனர். அதுமட்டுமின்றி அமர்பிரசாத் ரெட்டியிடம் இருந்து நீங்கள் வாங்கி வந்த பணத்தில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என கேட்டதுடன் இதனை வெளியே சொன்னால் குடும்பத்துடன் கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்து சென்றதாக தெரிகிறது.
இந்த தாக்குதலில் காயமடைந்த தேவியை அவரது உறவினர்கள் மீட்டு தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய தேவி, பயத்தின் காரணமாக இரண்டு நாட்கள் வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கி கிடந்ததாக தெரிகிறது.பின்னர் உறவினர்கள் அறிவுரையின்படி பாதிக்கப்பட்ட தேவி, அமர் பிரசாத் ரெட்டியின் கார் ஓட்டுநர் ஸ்ரீதர் மற்றும் பா.ஜ.க நிர்வாகி நிவேதா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, அமர் பிரசாத் ரெட்டி, அவரது ஓட்டுனர் ஸ்ரீதர், பா.ஜ.க நிர்வாகிகள் நிவேதா மற்றும் கஸ்தூரி ஆகிய 4 பேர் மீது கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வன்கொடுமை தடுப்புச் சட்டம், அத்துமீறி உள்ளே புகுந்து தாக்குதல், காயப்படுத்துதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அமர் பிரசாத் ரெட்டியின் ஓட்டுநர் ஸ்ரீதர் கைது செய்யப்பட்டுள்ளார்.