சென்னை அண்ணா நகர் பி பிளாக்கில், திமுக எம்பி கலாநிதி வீராசாமியின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் முதல் தளத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி அலிசா அப்துல்லா என்பவரின் மாமனார் வசித்து வருகிறார்.இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவரின் கார் ஓட்டுநர் சரவணன் என்பவருக்கும், கார் நிறுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் அலிஷா அப்துல்லாவின் உதவியாளர் மற்றும் உறவினர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் அலிஷா அப்துல்லா காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், " இந்தச் சம்பவம் எம்பி கலாநிதி வீராச்சாமி முன்னிலையில் நடைபெற்றதாகவும், எம்பி என்பதால் போலீசார் ஒருதலைப் பட்சமாக செயல்படுவதாகவும் கூறியிருந்தார்.
இதுகுறித்து விளக்கம் அளித்த எம்பி கலாநிதி வீராசாமி, " தனது அலுவலகத்தில் பாஜக நிர்வாகி அலிஷா அப்துல்லாவின் உறவினர்கள் இருப்பது எனக்கு தெரியாது; இன்று காலை தான் இது பற்றி நான் தெரிந்து கொண்டேன்.கடந்த நான்கு ஆண்டுகளாக எனது அலுவலகம் எங்கு தான் உள்ளது; கட்டடத்தின் உரிமையாளர் யார் என்பது கூட எனக்குத் தெரியாது.எனக்கு யார் சொத்தையும் அபகரிக்க வேண்டிய அவசியமும் எண்ணமும் இல்லை. தேர்தல் வரும் நேரத்தில் என் மீது அவதூறு பரப்ப பாஜகவினர் இதுபோன்று செயல்பட்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் நானோ அல்லது எனது தரப்பிலோ யாரும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை.நேற்று முன்தினம் எனது அப்பாவுக்கு அறுவை சிகிச்சை நடந்ததால் அங்கு சென்று விட்டு பிறகு அலுவலகம் திரும்பினேன். இந்த விஷயத்தில் பாஜகவினர் தேவை இல்லாமல் எனது பெயரை இழுக்கின்றனர். புகார் கொடுத்த சரவணனுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை; அவர் யார் என்பதே எனக்குத் தெரியாது. வழக்குரைடர்கள் மூலம் அலிஷா அப்துல்லா மீது நடவடிக்கை எடுப்பேன்" என தெரிவித்துள்ளார்.