சென்னை அருகே குன்றத்தூரில் பேருந்து படியில் தொங்கிய படி சென்று தவறி கீழே விழுந்த பள்ளி மாணவனின் காலில் பேருந்து சக்கரம் ஏறியதில் கால்கள் சிதைந்தன. சென்னையில் குன்றத்தூர் அடுத்த கொல்லசேரி நான்கு சாலை சந்திப்பில் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் குன்றத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்து மாணவர்கள் படித்து வருகின்றனர். மாணவர்கள் வழக்கமாக அரசு பேருந்துகளில் பள்ளிக்கு வந்து செல்வர். அந்த வகையில் நேற்று மாலை (நவ.17) பள்ளி முடிந்து மாணவர்கள் அரசு பேருந்தில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது 11-ம் வகுப்பு படிக்கும் சில மாணவர்கள் கொல்லச்சேரி நான்கு சாலையிலிருந்து குன்றத்தூர் நோக்கி சென்ற அரசு பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி சென்றுள்ளனர்.
அப்போது குன்றத்தூர் தேரடி அருகே வந்த போது படிக்கட்டில் பயணம் செய்த படி வந்த மாணவன் ஒருவன் தவறி கீழே விழுந்ததில் அவரது காலில் பேருந்து சக்கரம் ஏறி இறங்கியது. இதில் மாணவனின் கால் சிதைந்தது. இதை கண்டு சக மாணவர்களும், பயணிகளும் அலறினர். தகவல் அறிந்து உடனடியாக வந்த குன்றத்தூர் போலீசார் மாணவனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பேருந்தில் இருந்து தவறி விழுந்தது 11-ம் வகுப்பு படிக்கும் மாணவன் எனத் தெரியவந்தது.
மாணவனின் கால்கள் பலத்த காயமடைந்து சிதைந்த நிலையில் நேற்று இரவு கீழப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மாணவனின் இரு கால்களும் அகற்றப்பட்டன. மகனின் நிலை கண்டு பெற்றோர் கதறி அழுதது காண்போரை கண்கலங்க வைத்தது.மாணவனுக்கு முதற்கட்ட அறுவை சிகிச்சை தற்போது செய்யப்பட்டுள்ளதாகவும், முட்டு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக மற்றொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்ததாக பெற்றோர் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் கூறுகையில், தந்தை தான் எப்போதும் பள்ளி முடிந்து மகனை அழைத்து வருவார். நேற்று வேலை காரணமாக அவரால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. இந்தநிலையில் விபத்து ஏற்பட்டது என்று கூறி அழுதனர். தொடர்ந்து, மாணவனின் கல்வி செலவுக்கு அரசு உதவ வேண்டும் எனவும், தன் மகனுக்கு நேர்ந்தது போல் எந்தவொரு குழந்தைக்கும் இனி நடக்கக் கூடாது என கண்ணீர் சிந்தினர்.