பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், ரூ.1,000 வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கடைகளில் பச்சரிசி, சர்க்கரை, கரும்புடன் ரொக்கப்பரிசு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான பொங்கல் பரிசு தொகுப்பு தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், தைப்பொங்கல் 2024-ம் ஆண்டு குடும்ப அட்டைதத்தாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்க உத்தரவிடப்பட்டது.2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் வகையில் இரு நூற்று முப்பத்து எட்டு கோடியே தொண்ணூற்று இரண்டு லட்சத்து எழுபத்து இரண்டாயிருத்து எழுநூற்று நாற்பத்து ஒன்று (ரூ.238, 92, 72,741) செலவினம் ஏற்படும் என்று தெரிவித்தது.
கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் ரொக்கப் பரிசு குறித்த எந்த அறிவிப்பு இடம் பெறவில்லை. இந்த நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப் பரிசு வழங்க வேண்டும் என அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தமிழக அரசை வலியுறுத்தினர்.
இந்த நிலையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1 கோடியே 15 லட்சம் பயனாளிகளுக்கு வழங்கப்படும் ரூ. 1000 தொகை பொங்கல் திருநாளை முன்னிட்டு இம்மாதம் 10ம் தேதியே தொகை வரவு வைக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.