2024-ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தியாவில் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றாகும். அதே சமயம் பத்ம விருதுகள் பல்வேறு துறைகளில் தனிமனிதர்களின் சிறப்பான பணிகளுக்காக வழங்கப்படும் மரியாதைகளின் படிநிலையில் இரண்டாவது இடத்தில் உள்ளது.பத்ம விருதுகளில் மூன்று பிரிவுகள் உள்ளன: அவை பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் போன்றவையாகும். பத்ம விருதுகளுக்கு தேர்வு பெற்றவர்களுக்கு ராஷ்டிரபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கவுரவிப்பார்.
இந்நிலையில், கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் உடல்நலக்குறைவால் கடந்த டிசம்பர் மாதம் 28-ம் தேதி விஜயகாந்த் காலாமானார்.இந்நிலையில், பத்ம பூஷன் விருதை விஜயகாந்த் இருந்தபோது கொடுத்திருக்க வேண்டும் என்றும், அவர் உயிரோடு இருந்தபோதே விருது கொடுத்திருந்தால், மகிழ்ச்சியாக பெற்றிருப்போம் என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அதன் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "விஜயகாந்த் உயிருடன் இருந்த காலத்திலேயே விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும். விஜயகாந்த் இருந்தபோதே கொடுத்திருந்தால் சந்தோஷமாக பெற்றிருப்போம். விஜயகாந்த் மறைந்து 30 நாட்களுக்கு பிறகு இந்த சிறப்பை மத்திய அரசு கொடுத்துள்ளது. விஜயகாந்த் மீது அன்பு வைத்திருந்தவர்களுக்கு பத்ம பூஷன் விருதை சமர்ப்பிக்கிறோம்.பவதாரிணி மறைந்தது மிகப்பெரிய இழப்பு. பவதாரிணியை சின்ன குழந்தையாக இருந்த போதிருந்து பார்த்திருக்கிறேன். பவதாரிணியின் இனிய குரலை இனி கேட்க முடியாது என்பதே வேதனைதான்" என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.