சென்னை ராயபுரத்தில் தண்ணீர் தேங்கி இருப்பது, மின்சாரம் தடை, பேருந்து நிறுத்தப்பட்டதைக் கண்டித்து, பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்துவருகிறது. சென்னை திருவள்ளூவர், செங்கல்பட்டு உள்ளிட்ட வடமாவட்டங்களில் புயல் மற்றும் மழையின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.சென்னையில் அதி கனமழை பெய்ததால் நகரமே தண்ணீரில் தத்தளிக்கிறது. நகர தெருக்களில் எல்லாம் சூழ்ந்துள்ள மழைநீர் கடந்த 2015-ம் ஆண்டு வெள்ளத்தை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.
சாலை மறியல்:
இந்நிலையில், சென்னை ராயபுரத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராயபுரத்தில் தண்ணீர் தேங்கி இருப்பது, மின்சாரம் தடை, பேருந்து நிறுத்தப்பட்டதைக் கண்டித்து, பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
மேலும், ராயபுரம் முகாம்களில் வழங்கப்பட்டுள்ள உணவுகள் சரியில்லை எனக் கூறி, உணவுகளை சாலையில் கொட்டி பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவுச் செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களுடன் காவல்துறையினர், அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
சீரமைக்கப்பட்ட மின் விநியோகம்:
சென்னையில் ஜெ.ஜெ.நகர், அண்ணா நகர், சேத்துப்பட்டு உள்ளிட்டப் பகுதிகளில் மின்விநியோகம் சீரடைந்தது. அண்ணாசாலை, கிரீம்ஸ் சாலை, நுங்கம்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, ராயப்பேட்டை, கீழ்பாக்கம், மணலி, பெரியார் காலனி, நியூகொளத்தூர் பகுதிகளிலும் மின்விநியோகம் சீரடைந்துள்ளது.
கிண்டி ராமாபுரம், போரூர், அடையாறு, வேளச்சேரி, திருவான்மியூர், தொட்டியம்பாக்கம், பெசன்ட் நகரில் மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.