தாஜ்மஹாலின் உண்மை வரலாறு தொடர்பாக இந்து சேனா தரப்பில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொல்லியல் துறை அதுகுறித்து முடிவெடுக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்து சேனா அமைப்பின் தலைவர் சுர்ஜித் சிங் யாதவ் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “தாஜ்மஹால் என்ற கட்டடத்தை இஸ்லாமிய மன்னராக ஷாஜகான் கட்டவில்லை; இது ராஜா மான் சிங்கால் கட்டப்பட்டது.
இந்த உயரமான அழகிய கட்டடத்தில் உள்ள ஒரு அறையில் மும்தாஜ் புதைக்கப்பட்டார். அப்போது, இந்தக் கட்டடம் ராஜா மான் சிங்கின் பேரன் ராஜா ஜெய் சிங் வசம் இருந்தது” எனத் தெரிவித்திருந்தார்.
மேலும், தாஜ் மியூசியம் என்ற நூலில் மும்தாஜின் பூதவுடல் ராஜா ஜெய் சிங்குக்கு சொந்தமான நிலத்தில் உள்ள கட்டடத்தில் புதைக்கப்பட்டுள்ளது; ராஜா மான்சிங்கின் மாளிகையை ஷாஜகான் இடிக்கவில்லை எனக் கூறப்பட்டுள்ளது எனத் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ் சந்திர சர்மா, துஷார் ராவ் கெடலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், “மனுதாரர் தாஜ்மஹால் ராஜா மான் சிங் கட்டிய கட்டடம் எனக் கூறுகிறார்.இது தொடர்பாக ஏற்கனவே அவர் உச்ச நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்துள்ளார். அப்போது தொல்லியல் துறைக்கு இதுதொடர்பாக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கில், இந்து சேனா பிரதிநிதித்துவத்தை விரும்புகிறது. இது குறித்து தொல்லியல் துறை முடிவெடுக்கவில்லை. ஆகவே தொல்லியல் துறை ஆய்வு செய்து இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு முடித்துவைக்கப்பட்டது.