நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த அதிமுகவில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் ஆலோசனைக் கூட்டம் அதிமுக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஜெயக்குமார் பேசுகையில் ” தேர்தல் நாள் நெருங்கும்போது எந்த கட்சியுடன் கூட்டணி என்பது அறிவிக்கப்படும். வடக்கில் இந்தியா கூட்டணியின் நிலைமை போல தமிழ்நாட்டிலும் நடக்கும். சரியான காலம் வரும்போது எங்களுடன் யார் நிற்கிறார்கள், நாங்கள் எங்கு நிற்கிறோம் என்று தெரிய வரும். தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் சரி பாஜகவுடன் கூட்டணி இல்லை.
தேமுதிக,பாமக கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை என்பது கொள்கை முடிவு, அதுகுறித்து இப்போது சொல்ல முடியாது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தன்னை முன்னிலை படுத்துகிறார். யார் தவறு செய்தாலும் சுட்டிக் காட்டி உரிமையை பெற்று தருவது அதிமுக கொள்கை. கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று சொல்லி வருகிறார்கள். ஆளுநர் வேண்டாம் என்கிறார். அதை எல்லாம் இவர்கள் கூட்டணி மத்தியில் இருந்தபோது செய்திருக்கலாம்.
ஆசியாவில் மிகப்பெரிய குடும்பம் ஆனதுதான் திமுக செய்த சாதனை. மத்திய அரசு என்றாலும் சரி மாநில அரசு என்றாலும் சரி மக்கள் விரோத செயல்களை தோல் உரித்து காட்டுவோம்.விவசாயிகள் வாழ்க்கை தரம் மேம்பட வேண்டும். விவசாயிகளின் உண்மை தோழர் அதிமுகதான். இந்த தேர்தலில் விவசாயிகள் ஒட்டு மொத்த விரோதமும் திமுகவைச் சேரும். ” என்று அவர் கூறினார்.