தென்மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மீட்பு பணிக்கு கூடுதல் ஹெலிகாப்டர்களை வழங்கக் கோரி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 2 நாட்களாக தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகள் வெள்ளக் காடானது. இதனையடுத்து தமிழக அரசு சார்பில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மீட்பு பணிகளில் மாநில, தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் பல இடங்களில் வெள்ளம் வடியாத நிலையிலும், மக்கள் இன்னும் தவித்துக் கொண்டிருப்பதாலும் மீட்பு பணிகளுக்கு கூடுதல் ஹெலிகாப்டர்களை கோரி முதல்வர் ஸ்டாலின், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது; ”கடந்த 2 நாட்களாக தமிழகத்தின் தென் மாவட்டங்கள் வரலாறு காணாத மழைப்பொழிவை கண்டுள்ளன. சில பகுதிகளில் 1871க்குப் பிறகு இதுவரை இல்லாத அளவிற்கு அதிக மழைப் பெய்துள்ளது. இதன் காரணமாக, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் சுமார் 40 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஸ்ரீவைகுண்டம் மற்றும் தூத்துக்குடி நகரப் பகுதிகள், தாமிரபரணி ஆற்று வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தமிழக அரசு அதிகாரிகள், மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். நிவாரணப் பொருட்கள் தமிழகம் முழுவதும் இருந்து வருகின்றன. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் இந்த நிவாரணப் பொருட்களை மக்களிடம் கொண்டுச் சேர்க்க முடியவில்லை. அவற்றை ஹெலிகாப்டர் மூலமே கொண்டு சேர்க்க முடியும்.தற்போது விமானப்படையின் 4 ஹெலிகாப்டர்கள், கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையின் தலா 2 ஹெலிகாப்டர்கள் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளிலும், உணவு விநியோகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றன. இருப்பினும், பேரிடர் பாதிப்பை கவனத்தில் கொள்ளும் போது மீட்பு பணிகளுக்கு கூடுதல் ஹெலிகாப்டர்கள் தேவை. எனவே தாங்கள் விரைவில் கூடுதல் ஹெலிகாப்டர்களை அனுப்ப வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்,” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.