தி.மு.க.எம்.பி., ஆ.ராசா மற்றும் தமிழ்நாடு முன்னாள் டி.ஜி.பி ஜாபர் சேட் ஆகியோர் பேசியதாக கூறப்படும் தொலைபேசி உரையாடல் அடங்கிய தி.மு.க., பைல்ஸ் பாகம் மூன்று என்ற மற்றொரு ஆடியோவை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை, கடந்த ஏப்ரல் மாதம் தி.மு.க. பைல்ஸ் பாகம் ஒன்றை வெளியிட்டார். அதில் தி.மு.க.,வைச் சேர்ந்த எம்.பி ஜெகத்ரட்சகன், அமைச்சர் துரைமுருகன், முதல்வரின் குடும்பத்தினர் உள்ளிட்ட சிலரின் சொத்துப் பட்டியலை குறிப்பிட்டு இருந்தார்.அதை தொடர்ந்து, ஜூலை மாதம் தி.மு.க., பைல்ஸ் பாகம் இரண்டை அண்ணாமலை வெளியிட்டார். அதில், அரசு துறைகளில் ஒப்பந்தப் பணிகளில் நடந்த முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படுத்தியிருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு மற்றும் முன்னாள் உளவுத்துறை டி.ஜி.பி ஜாபர் சேட் ஆகியோர் பேசியதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடலை ஆடியோவாக வெளியிட்டார். பின்னர் கடந்த 17 ஆம் தேதி, 2வது ஆடியோ என்ற பெயரில் ஆ.ராசா மற்றும் ஜாபர் சேட் ஆகியோர் பேசியதாக கூறப்படும் ஆடியோவை வெளியிட்டார்.இந்நிலையில், இன்று தி.மு.க ஃபைல்ஸ் 3வது டேப் என்ற பெயரில் ஆடியோ ஒன்றை அண்ணாமலை வெளியிட்டு உள்ளார். இந்த ஆடியோவில் ஆ.ராசா மற்றும் ஜாபர்சேட் பேசி உள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ”மூன்றாவது டேப்: தி.மு.க எம்பி மற்றும் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா & தமிழக உளவுத்துறையின் முன்னாள் தலைவர் எம்.எஸ் ஜாபர் சேட் இடையேயான உரையாடல் ஏற்கனவே உருவாக்கப்பட்ட கதைகளைப் பயன்படுத்தி ஒருமித்த கருத்துடன் சி.பி.ஐ விசாரணையைக் கையாள்வது, அமைச்சரின் விருப்பமான கட்சிகளுக்கு ஸ்பெக்டரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு மேலும் காத்திருங்கள்… என்று பதிவிட்டுள்ளார்.