தி.மு.க. இளைஞரணி 2-வது மாநாடு சேலத்தில் வருகிற ஜன 21-ம் தேதி நடைபெறுகிறது. பிரமாண்டமாக நடைபெற உள்ள இந்த மாநாட்டில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மழை, வெள்ளம் காரணமாக ஏற்கனவே மாநாடு 2 முறை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் ஜன 21-ம் தேதி மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டையொட்டி சென்னையில் இருந்து சுடர் தொடர் ஓட்டத்தை தி.மு.க இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜன.18) தொடங்கி வைத்தார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார், அண்ணா, கலைஞர் சிலை அருகில் சுடர் தொடர் ஓட்டத்தை உதயநிதி தொடங்கி வைத்தார். இந்த சுடர், சென்னை- காஞ்சிபுரம் - விழுப்புரம் - கள்ளக்குறிச்சி வழியாக சேலம் மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகளால் மாநாடு நடைபெற இருக்கிற சேலம் பெத்தநாயக்கன்பாளையத்திற்கு கொண்டு சேர்க்கப்படவுள்ளது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், " 2 முறை தள்ளி வைக்கப்பட்டு மாநாடு வருகின்ற 21-ம் தேதி நடைபெற உள்ளது. திமுக தலைவர் இளைஞர் அணியின் மாநாடு பொறுப்பை எனக்கு கொடுத்தது மிகப்பெரிய சவால். அதை நாம் வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும். இந்த மாநாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
நீட் தேர்வை விலக்க கோரி 85 லட்சம் கையெழுத்துகள் பெற்றுள்ளோம். மாநாட்டின் போது அதனை திமுக தலைவரிடம் ஒப்படைப்போம். பின்னர் நேரடியாக நானே குடியரசு தலைவரை சந்தித்து அதனை வழங்க உள்ளேன். ராமர் கோயில் திறப்பிற்கோ, அல்லது மத நம்பிக்கைக்கோ திமுக எதிர்ப்பு இல்லை. அங்குள்ள மசூதியை இடித்து விட்டு கோயில் கட்டியதால் அதற்கு திமுக உடன்படவில்லை" என்று அவர் கூறினார்.