உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வு நேற்று (ஜன.22) நடைபெற்றது. கோயில் கருவறையில் பால ராமர் சிலை திறக்கப்பட்டு பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி நண்பகல் 12.20 மணியளவில் கோயிலுக்குள் வந்து பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், உ.பி ஆளுநர் ஆகியோர் பூஜையில் கலந்து கொண்டனர்.
பா.ஜ.க அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள், தொழிலதிபர்கள் என நாட்டின் முக்கிய பிரபலங்கள் சுமார் 8000 பேர் நேற்று விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு கலந்து கொண்டனர்.இந்நிலையில் இன்று (ஜன.23) முதல் பால ராமரை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தினமும் 3 லட்சம் பேர் கோயிலில் தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று முதல் பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அங்கு கடும் குளிர் நிலவும் போதும் மக்கள் ராமரை தரிசிக்க அதிகாலை முதலே குவிந்துள்ளனர். நேற்று இரவு முதலே பலர் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.காலை 7 மணி முதல் 11.30 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரையும் பொது மக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.மேலும் காலை 6.30 மணிக்கும், இரவு 7.30 மணிக்கும் சிறப்பு பூஜை நடத்தப்படும். சிறப்பு பூஜையில் மக்கள் கலந்து கொள்ளலாம். இதற்கான முன்பதிவை https://srjbtkshetra.org/ என்ற இணையத்தில் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.