போபால்: 100 ஆண்டுகளுக்கு முன்னரே ஜாதிவாரி பிரதிநிதித்துவம், வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என அன்றைய சென்னை மாகாணத்தில் முழங்கியது திராவிடர் பேரியக்கம். இப்போது இந்திய தேசமெங்கும் இந்த குரல் காங்கிரஸ் தலைவர்களான ராகுல், பிரியங்கா மூலமாக வீச்சோடு ஒலிக்கிறது. சமூக நீதியின் தாய்நிலம் தமிழ்நாடு- திராவிடர் இயக்கம்.
ஒரு நிலத்தில் எத்தனை விழுக்காடு மக்கள் இருக்கிறார்களோ அவர்களுக்கான வகுப்பு வாரி- ஜாதி வாரி பிரதிநிதித்துவம் கொடுக்கப்படுவதுதான் சமூக நீதி என சொன்னது மட்டுமல்ல.. அதை நடைமுறைப்படுத்துவதில் அன்று தொடங்கி இன்று வரை திராவிடர் இயக்கமும் அதன் வழிவந்த திராவிட கட்சிகளும் செயல்படுத்தி காட்டி இருக்கின்றன. இதற்கு உதாரணம் 69% இடஒதுக்கீடும் அதற்கு பெற்றுக் கொண்ட அரசியல் சாசன பாதுகாப்பும்!
காங்கிரஸின் முழக்கம்: இன்று இந்தியா நிலமெங்கும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு- இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான பிரதிநிதித்துவம் குரல் ஒலித்து கேட்கிறது. அதுவும் வகுப்பு வாரி பிரதிநிதித்துவத்தை 100 ஆண்டுகளுக்கு முன்னர் நிராகரித்த காரணத்தால் தந்தை பெரியார் விலகிய அதே காங்கிரஸ் கட்சிதான் இன்று ஜாதிவாரி கணக்கெடுப்பில் உக்கிரம் காட்டுகிறது -உரத்துப் பேசுகிறது! ஆம் திராவிடத்தின் குரலை பேசுகிறது இன்றைய காங்கிரஸ் பேரியக்கம்!
பீகார் ஜாதிவாரி கணக்கெடுப்பு: நாடாளுமன்றத்திலும் வெளியிலும் எங்கே 84% இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான பிரதிநிதித்துவம் என கேள்வி மேல் கேட்கிறார் ராகுல் காந்தி. காங்கிரஸ் ஆட்சியில் இணைந்திருக்கும் பீகார் மாநில கூட்டணி அரசு, ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி இந்த பிரளயத்துக்கு சுழி போட்டும் வைத்திருக்கிறது.
தேர்தல் பிரசாரம்: இப்போது காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் அத்தனையும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப் போகிறது- ஏற்கனவே எடுத்த கணக்கெடுப்பை வெளியிடப் போகிறது- தற்போதைய 5 மாநில சட்டசபை தேர்தல்களிலும் இதனையே தேர்தல் பிரசாரமாக கையில் எடுத்து கொண்டிருக்கிறது.
ஜாதிவாரி கணக்கெடுப்பு: சட்டசபை தேர்தலை எதிர்கொண்டிருக்கும் மத்திய பிரதேசத்தில் பிரசாரம் செய்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் அண்ணன் ராகுலைப் போலவே ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து பேசியிருக்கிறார். பிரியங்கா தமது பிரசாரத்தின் போது, பீகார் மக்கள் தொகை கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்ட மக்கள் தொகை 84% என தெரியவந்தது. ஆனால் இந்த பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பில் எத்தனை சதவீதம் வழங்கப்படுகிறது? இந்த நீதியை அறிந்து கொள்ளத்தான் நாம் ஜாதிவாரி கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்றார்.