தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் சாலை, வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. திரும்பும் திசை எல்லாம் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் சிக்கி தவிக்கின்றனர். மாநில, தேசிய பேரிடர் மீட்பு படையினர் பொதுமக்களை மீட்டு உதவி வருகின்றனர். தமிழ்நாடு அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்திய அரசின் கடற்படை, விமான படை, ராணுவப் படை என முப்படைகளும் களத்தில் மக்களுக்கு உதவி வருகின்றனர். கடற்படையின் ஹெலிகாப்டர் மூலமும் மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில், திருநெல்வேலியில் ஒரு வீட்டின் மாடியில் சிக்கித் தவித்த மக்களை கடற்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்க்கப்பட்டனர். கடற்படையின் ALH ஹெலிகாப்டர் மூலம் 2 கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 17 பேர் மீட்கப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு குழு 25 பேரை மீட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.