கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இணைப்பு சாலைகள், மழை நீர் வடிகால் பணிகளை நவம்பர் 15-க்குள் முடித்து ஒப்படைக்க, ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இணைப்பு சாலைகள், மழை நீர் வடிகால் பணிகளை நவம்பர் 15-க்குள் முடித்து ஒப்படைக்க, ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். போக்குவரத்து நெரிசலை சென்னையில் குறைப்பதற்காக, கிளாம்பாக்கத்தில், 40 ஏக்கர் நிலத்தில் ரூ. 400 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான இணைப்பு சாலைகள், வடிகால் அமைக்கும் பணிகள் முடிவடையாததால், திட்டமிட்டபடி, தீபாவளி பண்டிகைக்குள் திறக்க முடியவில்லை. இதுபோல 2022ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்குள் திறக்கவும் தீர்மானிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அப்போதும் பணிகள் முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அமைச்சர் சேகர் பாபு கூறுகையில், “ கிளாம்பாக்கம் பேருந்தநிலைய முகப்பில், ஜி.எஸ்.டி சாலையின் குறுக்காக மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள், 90% முடிந்துவிட்டன. இன்னும் 10% பணிகள், விரைவில் முடிக்கப்படும். அய்ஞ்சேரி இணைப்பு சாலை, நல்லம்பாக்கம் இணைப்பு சாலை பணிகளும், 90 % முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகளை முடித்து, வரும் நவம்பர் 15க்குள் ஒப்படைக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டு இருக்கிறோம். இறுதிகட்ட கட்டுமான பணிகளை தினசரி அடிப்படையில் கண்காணித்து வருகிறோம்” என்று கூறினார்.இதனால் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையின்போது, பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.