மணல் முறைகேடு விவகாரத்தில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில், தமிழக நீர்வளத்துறையின் முதன்மை பொறியாளர் முத்தையா இன்று விசாரணைக்கு ஆஜரானார். தமிழக அரசின் நீர்வளத் துறை சார்பில் ஆன்லைன் முன்பதிவு மூலம் ஆற்று மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், மணல் வாங்குபவர்களுக்கு அரசு சார்பில் இ-ரசீது வழங்கப்படுகிறது. இருப்பினும், ஆற்று மணல் விற்பனையில் முறைகேடு நடப்பதாகவும், உரிய நடைமுறையை பின்பற்றாமல் சட்டவிரோதமாக மணல் விற்கப்படுவதாகவும், இதனால் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு நடப்பதாகவும் புகார் எழுந்தது.
சோதன:
இதனையடுத்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து, தமிழகம் முழுதும் உள்ள மணல் குவாரிகளில் ஒரே நேரத்தில் அதிரடியாக தீவிர சோதனை நடத்தினர். குறிப்பாக, திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சம்மன்:
இந்த சோதனையின் போது அனைத்து இடங்களிலும், துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு கொடுத்தனர். அவர்களின் உதவியுடன் சோதனை நடத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள், சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக பல்வேறு முக்கிய ஆவணங்கள், கணக்கில் வராத பணம் சிக்கியதாக கூறப்பட்டது. இந்த சோதனைகளின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.
ஆஜர்:
இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில், தமிழக நீர்வளத்துறையின் முதன்மை பொறியாளர் முத்தையா இன்று திங்கள்கிழமை விசாரணைக்கு ஆஜரானார். மணல் முறைகேடு விவகாரத்தில் நீண்ட விடுமுறையில் சென்ற முதன்மை பொறியாளர் முத்தையா அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை அடுத்து தற்போது அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆவணங்களுடன் ஆஜரானார்.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் மணல் குவாரிகளுக்கு ஒப்பந்தங்கள் எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது?, அவை எவ்வாறு கண்காணிக்கப்படுகிறது? தமிழகத்தில் எத்தனை குவாரிகளுக்கு மணல் அள்ளுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை இந்த விசாரணையின்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.