தமிழகத்தை தொடர்ந்து ஆளுநருக்கு எதிராக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கால தாமதம் செய்வதாக குற்றச்சாட்டு.
கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கால தாமதம் செய்வதாக கூறி ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று (நவ.2) ரிட் மனுத் தாக்கல் செய்துள்ளது.
கேரள அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், தற்போது ஆளுநருக்கு எதிராக அரசு உச்ச நீதிமன்றம் சென்றுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களின் நலலுக்காக இயற்றும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் வேண்டும் என்றே தாமதப்படுத்தும் அளுநரின் நடத்தையானது சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகம் உள்ளிட்ட நமது அரசியலமைப்பின் அடிப்படை நோக்கங்களையே சிதைப்பதாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், மசோதாக்களுக்கு உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, இதே போன்று அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கால தாமதம் செய்வதாக கூறி தமிழ்நாடு அரசு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராகவும், பஞ்சாப் அரசு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்க்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் கேரள அரசும் ஆளுநருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.